கோட்டபாயாவுக்கு வைக்கப்பட்ட முதல் ஆப்பு!

1 Sc
1 Sc

கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் முதல் ராஜதந்திர பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக நிக்கி ஆசியன் ரிவ்யூ என்ற ஜப்பானிய இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே இலங்கை நிறைவேற்றவேண்டிய மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

எனினும் பெப்ரவரி இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள பேரவையின் கூட்டத்தின்போது கோட்டாபய ராஜபக்ச இதற்கு எதிரான செயற்திட்டங்களை முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக இலங்கை தமது பிரதான வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்துக்கு உள்ளாகக்கூடும் என்று நிக்கி ஆசியன் ரிவ்யூ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரணில்- மைத்ரி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையுடன் இணங்கிக்கொண்ட பரிந்துரைகளை மாற்றவேண்டும் என்று கோட்டாபயவின் புதிய அரசாங்கம் கூறிவருகிறது.

போரின்போது காணாமல் போனோருக்காக அமைக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை நடத்தி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் மனித உரிமைகளை பேணவும் முயன்று வருகின்றது.

இதன் அடிப்படையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை மூடிவிட்டு போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள படைவீரர்களுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக சட்டத்தில் இருந்து தப்பிக்கக்கூடிய வரப்பிரசாதத்தை பெற்றுக்கொடுக்க முயன்று வருவதாக ஜப்பானிய இணையம் குறிப்பிட்டுள்ளது.