சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / தமிழீழத்தை உருவாக்குமா தமிழ்த் தேசிய கீதம்?

தமிழீழத்தை உருவாக்குமா தமிழ்த் தேசிய கீதம்?

இலங்கையில் இனச்சிக்கல் ஏற்பட்ட காலத்திற்கும் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளுக்காக போராடுகின்ற காலத்திற்கும் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பான சர்ச்சைக்கும் கிட்டத்தட்ட ஒரே கால வயதுதான். இப்போது மீண்டும் தமிழில் தேசிய கீதம் பாடுவது தொடர்பான சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. எதையெடுத்தாலும் தமிழர்கள் தனிநாட்டை அடைந்துவிடுவார்கள் என்ற அரசியல் உள்நோக்கு கொண்ட கடந்த கால அலைதான் இப்போதும் இந்த விடயத்திலும் வீசிக்கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்த விடயம் தொடர்பில் பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச, தமிழில் தேசிய கீதம் பாடினால், அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கனவான தமிழீழத்தை நிறைவேற்றும் என்று பேசியிருந்தார். உண்மையில் இது மிகவும் நகைப்பான விடயம். தமிழில் தேசிய கீதம் பாட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் அபிலாசைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை. அத்துடன் தமிழ் மக்கள் சுதந்திர இலங்கைக்காக உழைத்தமைக்காகவும் அவர்கள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே அன்றைக்கு தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.

சில விடயங்களுக்காக வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இலங்கைத் தீவில் பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற்ற போது முதன் முதலில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை தரும் விடயமாக இருக்கலாம். பலரும் இதை நம்ப மறுக்கலாம். 1949ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் இவ்வாறு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அன்றுதான் சுதந்திர சதுக்கத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

அது மாத்திரமல்ல, சிங்களத்திலும் அரபியிலும்கூட அன்று தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனை தினமின என்ற சிங்களப் பத்திரிகை செய்தியாக வெளியிட்ட ஆதாரமும் இன்றும் காண்பிக்கப்படுகின்றது. அது மாத்திரமல்ல, அதற்குப் பிந்தைய காலத்தில், பாடசாலை மாணவர்களின் தமிழ் பாடப்புத்தகங்களில் தமிழிலும், சிங்களப் பாடப்புத்தகங்களில் சிங்களத்திலும் தேசிய கீதம் எழுதப்பட்டிருந்தது. ஆனாலும் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களோ, அந்த தமிழ் தேசிய கீதத்தில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருக்கவில்லை. அதற்கான அரசியல் காரணங்கள் பலரும் நன்று அறிந்த விடயங்களே.

இப்போது தமிழில் தேசிய கீதம் இசைப்பதுதான் தமிழ் மக்களின் பிரச்சினை என்ற தோரணையில் சில இனவாத பெரும்பான்மையின தலைவர்கள் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இந்த அலையில் தமிழ் தலைவர்களும் எடுபடுவதுதான் மிகவும் வேடிக்கை. தமிழிலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென்பதே தமிழர்களின் தலையாய பிரச்சினை என்பதைப் போன்ற தோற்றப்பாட்டை தமிழ் தலைமைகளும் ஏற்படுத்த முனைவது தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அபிலாசைகளையும் திசை திருப்புகின்ற செயற்பாடாகும்.

கடந்த காலத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த எமது தலைமைகள், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையை தாம் அடைந்த பெருவெற்றிகளில் ஒன்றாக சித்திரித்ததும், இப்போது அதையே அரசியல் உள்ளீடாக மாற்றி தேர்தல் வாக்குகளை அள்ள நினைப்பதும் ஒரே மாதிரியான அணுகுமுறை. அத்துடன் தமிழ் தேசிய கீதத்தின் வரலாறு குறித்தும், அதற்கு தமிழ் மக்கள் மத்தியிலான ஈடுபாடு குறித்தும் வரலாற்று பூர்வமாக பேசுவதற்கு தமிழ் மக்களிடம் ஒரு தலைவர்கூட இல்லை. சில தெற்கு இனவாத தலைவர்கள் எதைப் பேசினாலும் எதற்கு எதிரான ஒரு பேச்சை கொடுத்து ‘பாங்கு’ செய்யும் அரசியல் போக்கே எம்மிடம் உள்ளது.

இப்போதும், தமிழ் தேசிய கீதத்திற்கும் தமிழீழத்திற்கும் முடிச்சு போடுவதன் மூலம், மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சு போடும் தெற்கின் சில இனவாத தலைவர்களின் அரசியலுக்கு உயிர்கொடுக்கவே எமது தலைமைகள் முற்படுகின்றன. இதுபோன்ற செயற்பாடுகள் தமிழ் மக்களை தொடரச்சியாக பின்னோக்கி தள்ளும் என்ற ஆபத்தை உணர வேண்டும். தமிழ் மக்களின் வாழ்வில் விடியல் தோன்றுகின்ற போதே, அர்த்தமுள்ள சுதந்திரப் பாடலை அவர்கள் தமது வாய்களில் முனுமுனுக்க முடியும். இதைத்தான் ஒற்றுமையாக, ஒன்றுபட்டு, தீரக்கமாக தமிழ் தலைமைகள் எடுத்துரைக்க வேண்டும்.

ஆசிரியர் பீடம்

தமிழ்குரல்

07/02/2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவதல்ல!’

“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக ...