சூடானுடன் புத்துயிர் பெறும் இஸ்ரேலின் உறவு

0 mj
0 mj

சூடானின் முக்கிய தலைவர் அப்தெல் ஃபதாக் அல் புர்ஹானை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசியதை தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையில் துவண்டு போயிருந்த உறவு புத்துயிர் பெற தொடங்கியுள்ளது.

இதன் ஒரு முன்னேற்ற கட்டமாக, சூடான் வான் பரப்பில் தங்கள் நாட்டு விமானம் முதன்முறையாக பறந்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

சூடான் மற்றும் இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இஸ்ரேல் அரசு இணக்கமுடன் செயல்பட்டு வருவதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சூடான் வான் எல்லையை இஸ்ரேலிய விமானம் முதன்முறையாக கடந்து சென்றது. இது ஒரு நல்ல முன்னேற்றம்.

இஸ்ரேலின் வெளியுறவுக் கொள்கை என்ற பனிப்பாறையில் இது ஒரு முனை மட்டுமே. அதாவது 10 சதவீதம் மட்டுமே வெளியே கண்களுக்கு புலப்படுவதாக உள்ளது. வரும் நாள்களில் பெரிய அளவிலான மாற்றங்களை காணலாம்’ என கூறினார்.

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் ஆட்சிக் காலத்தின்போது அல் கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததையடுத்து சூடானுடன் இஸ்ரேல் மறைமுகப் போரில் ஈடுபட்டு வந்தது. சூடானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்ததையடுத்து அந்த நாட்டு ராணுவம் கடந்த ஏப்ரலில் பஷீரை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கியது.

இந்தச் சூழ்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு சூடானின் முக்கிய தலைவர் அப்தெல் ஃபதாக் அல் புர்ஹானை நெதன்யாகு சந்தித்துப் பேசியதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவு மலர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.