அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்!

kekaliya
kekaliya

“சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசுகள் வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடிபணியாது.”


இவ்வாறு தெரிவித்தார் கோட்டாபய அரசின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.


இலங்கை அரசானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனவும், இந்தக் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலக முடியாதவாறு அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் கொழும்பில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா தெரிவித்திருந்தார்.


இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-


“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாளத்துக்கேற்ப அமெரிக்கா ஆடுகின்றதோ அல்லது அமெரிக்காவின் தாளத்துக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆடுகின்றதோ என எமக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நாட்டின் ஜனாதிபதி சம்பந்தன் அல்ல கோட்டாபய என்பதை அமெரிக்கா முதலில் கருத்தில்கொள்ள வேண்டும்.


கோட்டாபய அரசுடன் பேசாமல் சம்பந்தன் குழுவினர் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் கதைகளைக் கேட்டுக்கொண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா அநாவசியமான முடிவுகளை எடுப்பதுடன் விசமத்தனமான கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது” – என்றார்.