நாட்டை நாமே காப்பாற்றினோம் – சம்பிக்க

h
h

இந்த நாட்டில் தீவிரவாதிகளினால் நாட்டைக் கைப்பற்ற முயற்சித்தபோது அதற்கெதிராக நாங்களே நின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று பலர் எழுந்து நின்று சூரர்களைப்போல குரல்கொடுக்கலாம்.

எனினும், விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல்கள் இருந்த காலத்திலும் அதற்கெதிராகவும் நாங்களே குரல் கொடுத்தோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான மாவில்லாறு போரினை ஆரம்பிக்க முன்நின்று இருந்தவர்கள் நாங்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்கள் மீது கோபத்திலோ இந்த நடவடிக்கையை நாங்கள் ஆரம்பிக்கவில்லை.

எமது நாட்டின் மீது இருந்த பற்று காரணமாகவே அதனை ஆரம்பித்தோம். தமது பிள்ளைகளை வெளிநாட்டில் கல்விகற்ற வசதிகளை ஏற்படுத்திவிட்டு தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் நாங்கள் அல்லர்.

அந்த தேசப்பற்று இன்று எமது ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது. இந்த நாட்டில் ஐக்கியத்தை சீர்குலைத்து, வேறொரு நாட்டினை இங்கு உருவாக்குவதற்கு இடமளிக்கும் கொள்கையும் எம்மிடம் கிடையாது.

இந்த நாடு பிரிவதற்கு சந்தர்ப்பம் இருந்தபோது அதற்கெதிராக குரல் எழுப்பியவர்களே நாங்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது இல்லை என்கிற துணிச்சலில் இன்று நாட்டைப் பிரிக்கின்ற சக்திகள் என்றும், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகவும் பலர் குரல் கொடுக்கின்றனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் கொடூரமாக இருந்த காலத்திலேயே அந்த அமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற குரலை தாம் உயர்த்தியிருந்தோம்.

எனவே எமது ஐக்கிய மக்கள் சக்தியானது இந்த நாட்டில் ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவும் அதேபோல நாட்டிலுள்ள அனைத்து இன மக்களினதும் உரிமைகளை உறுதிசெய்யவும் முன்நிற்கிறது.

குடும்ப ஆட்சியற்ற சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உருவெடுத்துள்ளது. எம்மிடையே இரத்தக்கறை கொண்ட கைகள் இல்லை.

எமது ஆட்சியில் அடிப்படைவாதத்திற்கோ, பிரிவினைவாதத்திற்கோ, சித்திரவதைகளுக்கோ இடமில்லை.

ஆகவே எமது பொது அணியை நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னதாக அறிவிக்க எதிர்பார்ப்பதோடு அனைவரும் இணையும்படியும் அழைக்கின்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.