தமிழக் கூட்டமைப்பில் ரஞ்சனுக்கு வேட்புமனு – சுமந்திரன்

4 d
4 d

“பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சஜித் தலைமையிலான கூட்டணி வேட்புமனு வழங்காவிட்டால், தான் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.” – என்று ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. நேற்று தெரிவித்தார்.

நீதிமன்றத்தால் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டபின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ரஞ்சன் ராமநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வாய்ப்பு வழங்காவிட்டால் என்ன செய்வீர்கள் என எழுப்பட்ட வினாவுக்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க,

” கூட்டணியில் வாய்ப்பளிக்கப்படும் என சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் கூறினர். எனினும், கூட்டணியில் அனுமதி மறுக்கப்படும்பட்சத்தில் தான் வாய்ப்பளிப்பதாக சுமந்திரனும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரு தரப்புகளும் கதவடைப்பு செய்யும் பட்சத்தில் சுயேட்சையாகவேனும் போட்டியிடுவேன்.” என்றார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் செல்வதற்கு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார். அத்துடன், வௌிநாடு செல்ல நீதவான் மொஹமட் மினார் பயணத்தடை விதித்தார்.

நீதிமன்ற செயற்பாடுகளுக்குள் அநாவசியமாக தலையீடு செய்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு 44 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.