இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்தனர்

1 covidcurve 3
1 covidcurve 3

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் மேலும் நான்கு தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தமது நிறுவனம் முன்னெடுத்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக, பொரளை மருத்துவ ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருக் பண்டார தெரிவித்தார்.

ஏற்கனவே சுகமடைந்து வெளியேறிய மூவருக்கு மேலதிகமாக இந்த நால்வரின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவர்கள் குணமடைந்திருப்பது தெரியவந்ததாகவும், விஷேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரைப்பார்களாயின் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வீடு செல்ல முடியுமான சூழல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்கட்டினார்.

முன்னதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி சுகமடைந்து வீடு திரும்பியிருந்தார். பின்னர் கடந்த 23ஆம் திகதி 2 ஆவது கொரோனா தொற்றாளரான மத்தேகொடையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி குணமடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 11 ஆவது கொரோனா தொற்றாளராகப் பதிவான 23 வயதுடைய யுவதி, இலங்கையில் குணமடைந்த 3 ஆவது கொரோனா தொற்றாளராக வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையிலேயே மேலும் நால்வரின் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் குணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.