நானே ஜனாதிபதி வேட்பாளர்- சஜித் தெரிவிப்பு

sajith 3
sajith 3

சபாநாயகர் கருஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாச ஆகியோரிற்கிடையில் நேற்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் யார் என்னதான் கூறினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெடிய பிரதேச செயலகப் பிரிவில் முலன்யாய கிராமத்தில் நிர்மாணித்த மாதிரிக்கிராமங்களை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊடகங்களை அவதானித்தால் அனைவருடைய கேள்வியும் சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பதாகும். யார் என்னதான் கருத்துக்களை தெரிவித்து முட்டுக்கட்டைகளை போட்டாலும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக போட்டியிடுவேன் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

எமது நாட்டிலுள்ள சகல மக்கனினதும் இன, மத,மொழி மற்றும் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களினதும் ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் நான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன். இது மாத்திரமன்றி இவர்களது ஆசீர்வாதத்துடன் அதில் கட்டாயமாக வெற்றியும் பெறுவேன். தற்பொழுது சஜித் பிரேமதாஸவின் காலமே உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் சஜித்திற்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சஜித்திற்கு நெருக்கமான தரப்பினர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சஜித் கழுகு சின்னத்தில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டது. தற்போது வாழைப்பழ சின்னத்திலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில் போட்டியிடுவார் எனும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை பெயரை தெரிவுக் குழுவில் பரிந்துரைத்து பெரும்பாலானவர்களின் ஆதரவுடன் அறிவிப்பைச் செய்வதென்றும் தேவையேற்படின் வாக்கெடுப்பு நடத்துவதெனவும் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது,

இந்நிலையில் கரு ஜெயசூரிய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை தான் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.