வவுனியாவில் கொரோனா தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம் காட்டப்படுகின்றதா? நகரசபை உறுப்பினர் கேள்வி

IMG 20210125 204936
IMG 20210125 204936

வவுனியாவில் கொரோனா தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம் காட்டப்படுகின்றதா என வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் லரிப் கேள்வியெழுப்பியுள்ளார்.


இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வவுனியாவில் கொரோனா தொற்று இன பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் பரவியுள்ளது. இது வருந்ததக்க விடயமாக உள்ளது.


எனினும் தற்போது வவுனியாவில் இன ரீதியான பாரபட்சமாக கொரோனா தொற்று கருதப்படுகின்றதான தோற்றப்பாடு பல தரப்பாலும் வெளிப்படுத்தப்படுகின்றது.


வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள முஸ்லீம் வர்த்தகர்கள் பலரும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டிய அதிகாரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் மௌனம் காத்து வருகின்றமை வேதனைக்குரியதாகும்.


தமது ஆட்சிக்காலம் என மார்தட்டிக்கொண்டாலும் கூட மக்களுக்கு நடக்கும் பல்வேறு துன்பகரமான விடயங்களைக்கூட கேட்க முடியாத இடத்தில் அவர்கள் இருப்பது இதன் மூலமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.


இந்நிலையில் வவுனியாவில் கொரோனா நிலைமைக்கு பின்னர் சில அரச திணைக்களங்களிலும் கூட இன ரீதியாகவும் கிராம ரீதியாகவும் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்.


எனவே இது தொடர்பில் இனியேனும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அதிகாரிகளும் குறுகிய மனப்பான்மையுடன் நடக்க கூடாது எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.