தமிழ் ஊடகவியலாளரின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல்

images 3 1
images 3 1

தமிழ் ஊடகவியலாளரான இராமலிங்கம் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியமையினால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இச்சம்பவமானது வியாழக்கிழமை மாலை கல்முனையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.

அதன் காரணமாக அச்சமடைந்த அவரது குடும்பம் கல்முனை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் வீட்டிற்குச்சென்ற இனந்தெரியாத நபர்கள் தங்களை வங்கி ஊழியர்கள் என அடையாளப்படுத்தியதுடன் தில்லைநாயகத்தின் மனைவி வங்கியில் மேலதிகமான பணத்தினை பெற்று வந்ததாகவும் அதனை மீளத்தருமாறு கூறியதுடன் ஊடகவியலாளரான தில்லைநாயகத்தை பற்றியும் மிரட்டும் தொனியிலும் விசாரித்து சென்றுள்ளனர்.

கல்முனையில் வசித்து வந்த தமிழ் ஊடகவியலாளரான தில்லைநாயகம் இதற்கு முன்னரும் பல தடவைகள் இனந்தெரியாதவர்களினால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர் என்பதுடன் அவரது கல்முனையில் உள்ள வீட்டிற்கு இரவு வேளையில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அவரது ஊடக்க்கருவிகள் உட்பட ஊடகம் சம்பந்தமான ஆவனங்களையும் எடுத்துச்சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவங்கள் தொடர்பாக இதற்கு முன்னரும் கல்முனை காவல் நிலையத்திலும் கல்முனை மனித உரிமை அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.