ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் அரைஇறுதிக்குள் நுழைந்தது கோவா அணி!

201808260126572089 ISL 2018 Indian Super League to kick off on September 29 SECVPF
201808260126572089 ISL 2018 Indian Super League to kick off on September 29 SECVPF

11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 109-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- ஐதராபாத் எப்.சி. அணிகள் சந்தித்தன. கட்டாயம் வெற்றி பெற்ற வேண்டிய நெருக்கடியில் ஐதராபாத்தும், டிரா செய்தாலே அரைஇறுதி வாய்ப்பு என்ற சூழலில் கோவாவும் களம் இறங்கின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் எல்லையை நெருங்கி வந்தார்களே தவிர கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இதனால் கோவா எப்.சி. அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. அந்த அணி அரைஇறுதிசுற்றை எட்டுவது இது 6-வது முறையாகும். 29 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்த ஐதராபாத் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இரவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை தோற்கடித்தது.

லீக் சுற்று நிறைவில் டாப்-4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி (40 புள்ளி), ஏ.டி.கே. மோகன் பகான் (40 புள்ளி), நார்த் ஈஸ்ட் யுனைடெட் (33 புள்ளி), கோவா (31 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின. எஞ்சிய 7 அணிகள் வெளியேறின. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. 20 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

அரைஇறுதி ஆட்டங்களில் மும்பை சிட்டி-எப்.சி. கோவா, ஏ.டி.கே. மோகன் பகான்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. அரைஇறுதி சுற்று வருகிற 5-ஆம் திகதி தொடங்குகிறது.