இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்பாட்டம்

IMG 0289
IMG 0289

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலை முகாமையாளருக்கு எதிராகா பல குற்றச்சாட்டு தெரிவித்து அவரை இடமாற்றக் கோரி சில ஊழியர்கள் இன்று (08) போக்குவரத்து சபை சாலைக்கு முன்னால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சாலை முகாமையாளரே நாளாந்த வேதனத்தில் வந்தவர்களின் ஒருவனை காரியாலயத்தினுள் புலனாய்வாளராக வைத்துக்கொண்டு நாங்கள் கதைப்பதை பதிவு செய்யாதே, முகாமையாளரே நாங்கள் அடிமைகள் அல்ல தொழில் சங்கத்திற்கு இலஞ்சம் கொடுத்து தொழிலாளர்களை பழிவாங்காதே, அரக்கன் செயலாற்று முகாமையாளரை வெளியேற்று.

முகாமையாளரே க.போ.தர சாதாரண பரீட்சையில் தகுதியற்ற முகாமையாளரை வெளியேற்று, மதவெறி முகாமையாளரே தங்களது அடியாட்களை சாலை வளாகத்தினுள் அடாவடித்தனம் புரிய இடமளியாதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறும் பொம்மை ஒன்றும் கட்டப்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த முகாமையாளர் கடந்த காலத்தில் இந்த சாலை முகாமையாளராக பணிபுரிந்து இலஞ்ச மோசடி தொடர்பாக இடைநிறுத்தப்பட்டு பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் முகாமையாளராக கடமையேற்ற நிலையில் இவருக்கு எதிராக ஒருபகுதி ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருந்தபோதும் இலங்கை போக்குவரத்து சபை கிழக்கு பிராந்திய பணிப்பாளரின் சமரசத்தில் தொடர்ந்து அவர் கடமையாற்றி வரும் நிலையில் மீண்டும் அவருடைய பல செயல்பாடுகள் தொடர்பாக ஊழியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து அவரை இடமாற்றுமாறு கோரி இந்த ஆரர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் வந்து இதற்கான தீர்வு தரும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.