தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் கைது!

VideoCapture 20210512 185134
VideoCapture 20210512 185134

யாழ்ப்பாண மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாண தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாண தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோவின் அறிவுறுத்தலில் சிறப்பு நடவடிக்கை இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீதிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள், வியாபார நிலையங்களுக்குள் சென்ற காவல்துறையினர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேரைக் கைது செய்து பேருந்தில் யாழ்ப்பாண காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் 50 பேருக்கும் எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கு வரும் ஜூலை 21,22ஆம் திகதிகளில் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்படும் என்று காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.