மட்டக்களப்பு மீன்பிடித்துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் வருகை!

05 1457177072 douglas devananda 600
05 1457177072 douglas devananda 600

கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (26.10.2021) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று மீனவர்களது பிரச்சினைகளை கேட்றிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் இன்று மாலை வாழைச்சேனை  வருகைதந்த அமைச்சர் மீன்பிடித்துறைமுகத்தில் பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீனவர்களுடனும் மீன்பிடித்துறைமுக அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வினைப் பெற்றுக் கொடுத்ததுடன் ஏனைய பிரச்சினைகளுக்கு  கட்டம் கட்டமாக தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

அத்துடன் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து தொழிலுக்காக கடந்த மாதம் 26ம் திகதி சென்ற படகு காணாமல் போன நிலையில் அந்தமான் தீவில் கடலோர காவலாளிகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகவும் அதில் உள்ள நான்கு மீனவர்களும் தேகாரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்களையும் படகையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதே வேளை காணாமல் போன படகின் குடும்ப உறுப்பினர்களை வாழைச்சேனை அல் ஸபா மீனவர் சங்கத்தில் சந்தித்த அமைச்சர் அவர்களிடம் மிக விரைவில் உங்களது குடும்ப உறுப்பினர்கள் வந்து சேர்வார்கள் என்றும் தெரிவித்தார்.
அமைச்சருடன் மட்டக்களப்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.