08 இந்திய மீனவர்களுக்கு 1 வருட கால சிறைத் தண்டனை

vilakam
vilakam

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 08 இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒருவருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த இந்திய மீனவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ் பாலசுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து கடந்த 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு அன்றையதினம் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இன்றைய தினம் குறித்த மீனவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

அதற்கமைவாக இன்றைய தினம் 08 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டு பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இந்திய மீனவர்கள் 08 பேருக்கும் தலா ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இதேவேளை இவர்களை கைது செய்யும்போது இவர்களிடமிருந்த கைத்தொலைபேசிகள் மற்றும் நாணயங்கள் விடுவிக்கப்பட்டதுடன் படகு வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கில் இந்திய மீனவர்கள் சார்பாக இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 16 வயதுடைய 18 வயது சிறுவர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.