சூடானிலிருந்து 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

1682486794 sudan L
1682486794 sudan L

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்துவந்த இலங்கையர்களின் முதல் குழு வெற்றிகரமாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, சூடானில் உள்ள 41 இலங்கையர்களில் 13 பேர் சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா துணைத் தூதரகத்துக்கு அழைத்துவரப்பட்டதுடன், பதில் தூதரக அதிகாரியால் அவர்கள் வரவேற்கப்பட்டனர்.

சூடானில் சிக்கியுள்ள எஞ்சிய இலங்கையர்கள் இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதி சூடானின் கார்ட்டூமில் வன்முறை வெடித்தது. அந்நாட்டின் இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே பல வாரங்களாக முறுகல் ஏற்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய இரு குழுக்களும் ஒரு காலத்தில் பங்காளிகளாக இருந்தன.

இந்த மோதலில் சூடான் நாட்டு ராணுவ தளபதியும் ஜனாதிபதியுமான ஃபத்தா அல்-புர்ஹான் ஒரு புறமும், துணை ராணுவப் பிரிவான ஆர்.எஸ்.எஃப். தலைவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ மறுபுறமும் உள்ளனர்.

முன்னதாக இருவரும் ஒன்றாகப் பணியாற்றினர். இருவரும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக களம் இறங்கியிருப்பது சூடான் நாட்டில் மோதல்களை தோற்றுவித்துள்ளது.

சூடானில் அதிகரித்து வரும் அதிகாரப் போராட்டம் ஆரம்பத்தில் தலைநகர் கார்ட்டூமில் மோதலுக்கு வழிவகுத்தது. பின்னர் அது விரைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

இதில் 460 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அத்துடன் குறைந்தது 4,000 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.