தேசிய மரநடுகை திட்டத்தினை ஆரம்பித்த கிழக்கு ஆளுனர்

01 23
01 23

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் கீழ் கிழக்கு மாகாணத்தில் பசுமையான மாகாணம் தேசிய மரநடுகை திட்டம் எனும் தொனிப் பொருளில் வேலைத் திட்டம் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான மஜ்மாநகர் கிராமத்திலும் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நாசிவந்தீவு கிராமத்திலும் தேசிய மர நடுகை திட்டம் இன்று (28) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி, சிறுவர் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் என்பன இணைந்து பசுமையான மாகாணம் தேசிய மரநடுகை திட்டம் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்றது.

குறித்த பசுமையான மாகாணம் தேசிய மரநடுகை திட்டத்தின் மூலம் எண்பதாயிரம் மரங்கள் இன்றைய நாளில் நடுகை செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வருடத்தில் இருபது இலட்சம் மரங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை உதவி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, கிழக்கு மாகாண அளுனர் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.