ஒப்படைக்கப்படாத ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அலுவலகம்

7 ad
7 ad

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வழங்கப்பட்ட அலுவலகம் இன்னமும் மாவட்டச் செயலக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

அதேபோன்று, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பாவனைக்கு வழங்கப்பட்ட வாகனமும் மீள ஒப்படைக்கப்படவில்லை.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அலுவலகம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலகத்தின் தளபாடங்கள், அலைபேசி, மாவட்ட செயலகத்தின் மின்சார விநியோகம் என்பன அந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அந்த அலுவலகத்துக்கு இணைப்புச் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்த அலுவலகம் மீளவும் மாவட்ட செயலக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. அதேபோன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனமும் மீள ஒப்படைக்கப்படவில்லை.

அந்த வாகனத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் பயன்படுத்தி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

“அலுவலகத்தை ஒப்படைப்பதாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கூறியிருந்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அலுவலகத்தைப் பாவிக்க முடியாது” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜுவன் கூல் தெரிவித்தார்.