திணைக்களத்தின் அசமந்தம்- இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

1 rtg
1 rtg

யாழ். அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு கல்வித் திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் காரணமாக அந்தப் பாடசாலையில் கடமையாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கடமைக்குச் செல்ல மறுப்புத் தெரிவித்துள்ளதோடு, அந்தப் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களும் அங்கு செல்வதற்கு பயப்படும் நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமன்றி அந்தப் பாடசாலையின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டவரும் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்துக்குச் செல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் புதிய பாடசாலையில் கடமையேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதோடு, நாளுக்குநாள் அங்கு பிரச்சனைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

பழைய மாணவர்கள் நேற்று பாடசாலையில் உள்நுழைந்ததால் அசாதாரண நிலை உருவாகி பொலிஸ் நிலையம் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் பாடசாலை மூடப்படும் அபாயநிலை தோன்றியுள்ளது?

இந்த விடயங்களை பல தடவைகள் மாகாணக் கல்வி அமைச்சின் செயலருக்கும், மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும், யாழ். கல்வி வலயப் பணிப்பாளருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு பாடசாலைக்கு வெளியில் உள்ளவர்கள் பாடசாலையை ஆக்கிரமித்து தங்களுக்கு தேவையான விடயங்களை முன்னெடுக்க திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஊடகங்கங்கள் வாயிலாக அழியப்போகும் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம் எனத் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக வாய்பேசாமல் இருக்கும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் பாணியில் திணைக்களம் நடந்துகொள்வதும், சண்டித்தனம் புரிவோருக்கு திணைக்களம் பயந்து நடுங்குவதும் வெளிப்படையாக உள்ளது.

இப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நலன்சார்ந்து, அவர்களின் பாதுகாப்புக் கருதியும், சுயமான செயற்பாட்டை வலியுறுத்தியும் கல்வி அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்கத்தவறினால் ஆசிரியர்கள் அனைவரும் தொடர் விடுமுறையில் நிற்கும் நிலை ஏற்படும்” – என்றுள்ளது.