இலங்கையில் ‘கொரோனா’ உச்சம்! இதுவரை 7 பேர் பாதிப்பு என உறுதி

1 5
1 5

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட இருவர் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் 103 போ் கொரோனாத் தொற்று சந்தேக அறிகுறிகளுடன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்காணிப்பில் உள்ளவர்களில் 3 போ் வெளிநாட்டவா்களாவர்.

இந்தத் தொற்று நோயின் அபாயத்தைக் கருத்தில்கொண்டு மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளுக்கான அனுமதிகளை வழங்குவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிகளவில் மக்கள் கூடிய இடங்களிலிருந்தே கொரோனா தொற்று பரவியுள்ளது எனத் தெரியவந்துள்ளதையடுத்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

கொரோனாத் தொற்று ஒழிப்புக்கான செயலணியின் பணிகள் நாளை முதல் இராஜகிரியவில் அமைக்கப்படவுள்ள விசேட அலுவலகத்திலிருந்து முன்னெடுக்கப்படும்” – என்றார்.

அனில் ஜாசிங்க

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கருத்துரைக்கும்போது,

“கொரோனாத் தொற்றுக்குள்ளாகியவர்கள் என இன்று உறுதிப்படுத்தப்பட்ட இருவரும் இத்தாலியிலிருந்து வரும்போதே தமது நோய்த்தொற்றை மறைத்துக்கொண்டே இலங்கை வந்துள்ளனர்.

கொரோனாத் தொற்றுக்கு ஆளானவர்களின் தொகை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

இத்தாலி போன்ற நாடுகளிலிருந்தே இலங்கைக்கு இந்த நோய் வருகின்றது. அதனாலேயே இத்தாலி, ஈரான், தென் கொரியாவிலிருந்து வருவோரை மூன்று கண்காணிப்பு நிலையங்களில் வைத்துத் தனிமைப்படுத்திப் பரிசோதிக்கத் தீர்மானித்திருந்தோம்.

ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் இதுவரையில் பெருமளவிலான சமூகக் கட்டமைப்புக்குள் இந்த நோய் பரவும் அபாயம் இல்லை. இரு வாரங்கள் முறையாகச் செயற்படும் பட்சத்தில் நிலைமையை வெற்றிகொள்ள முடியும்” – என்றார்.