மே 27இல் தேர்தல்! – வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் திங்கள் வெளிவரலாம்

3 ad 1
3 ad 1

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை நடத்தப்படவுள்ளது எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 20ஆம் திகதி அல்லது 21ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களுக்கு அமைவாக வேட்பாளர்களுக்குரிய விருப்பு இலக்கங்கள் ஒதுக்கும் பணி முடிவடைந்துள்ளது எனவும், எதிர்வரும் திங்கட்கிழமை அது பெரும்பாலும் வெளியிடப்படக் கூடும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையால் ஜூன் 2ஆம் திகதிக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டேயாக வேண்டும். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாவிட்டால், அரசமைப்புச் சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக மே 27ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரைக்கு 5 தொடக்கம் 7 வாரங்கள் வரை அவகாசம் வழங்கவேண்டும். அதற்கு அமைவாக எதிர்வரும் 20ஆம் அல்லது 21ஆம் திகதிகளிலிருந்து தேர்தல் பணிகள் மீள ஆரம்பிக்க தேர்தல்கள் திணைக்களம் திட்டமிட்டு வருகின்றது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானத்துக்கு ஆணைக்குழுவுக்குள்ளும், திணைக்களத்துக்குள்ளும் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் மருத்துவ நிபுணர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலர் எனப் பல தரப்பினரையும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். இதன்பின்னர் பெரும்பாலும் ஏப்ரல் 21ஆம் திகதி தேர்தல் தொடர்பான சகல உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் வெளிவரும் என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.