தேரருடன் வந்து பொலிஸாரைத் தாக்கிய ஒருவர் மடக்கிப் பிடிப்பு!

6bs
6bs

வாரியபொல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாரியபொலவில் உள்ள பொத்துவெல பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பொலிஸார் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைத் திட்டி, அச்சுறுத்தல் விடுத்தார்.

இது தொடர்பில் இன்னொரு நபர் ஒருவர், குறித்த பொலிஸ் பரிசோதகருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த நபரைக் கைதுசெய்ய வேண்டாம் எனக் கோரினார்.

இது குறித்து உடனடியாக தனது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு குறித்த பொலிஸ்  பரிசோதகர் அறிவித்தார்.

ஆரம்பத்தில் அச்சுறுத்தல் விடுத்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர் எனப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இது தொடர்பில் குறித்த மதுபான வர்த்தகர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டார்.

பின்னர் அவருடன் தேரர் ஒருவர் உள்ளிட்ட மற்றொரு நபர் பொலிஸ் நிலையத்துக்கு வந்து குறித்த பொலிஸ் பரிசோதகரை அச்சுறுத்தி, அவரைத் தள்ளி விழுத்தித் தாக்க முயன்றார்.

இதன்போது, குறித்த பொலிஸ் பரிசோதகரின் தலை சுவருடன் மோதியுள்ளது பின்னர் குறித்த சந்தேகநபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் குடிபோதையில் இருந்தாரா என்பதை ஆராய, குருநாகல் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

தள்ளிவிடப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சந்தேகநபர் தொடர்பில் வாரியபொல நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (21) பொலிஸார் அறிக்கைகளை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவருக்கு 29ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த தேரர் மற்றும் குறித்த சட்டவிரோத மதுபான விற்பனையாளர் கைது செய்யப்படாமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இது தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.