கோட்டாவின் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு முயற்சி!

1es
1es

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்ல ஏற்பாடுகள் சில தரப்புக்களால் செய்யப்படுவதாக அறியமுடிகின்றது.

இதன்படி நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வர்த்தமானியை இரத்துச் செய்து அந்தத் தீர்மானத்தை வலுவற்றதாக உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என அறியமுடிந்தது.

இதன் சட்ட தாற்பரியம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:-

“ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம், ஜனாதிபதியினால்  மூன்று மாத காலங்களுக்குள் கூட்டப்பட்ட வேண்டும். அப்படிக் கூட்டப்படாத பட்சத்தில் அவரின் நாடாளுமன்றக் கலைப்பு வலுவற்ற தாகிவிடும்.

அது தொடர்பான வர்த்தமானியும் வலுவிழந்து நாடாளுமன்றக் கலைப்பே அரசமைப்புக்கு முரணானதாக மாறிவிடும். இது கிட்டத்தட்ட 2018 ஆம் ஆண்டு அரசமைப்பு சர்ச்சை எழுந்தபோது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குச் சென்றபோது இருந்த நிலைமை. எனவே, நாடாளுமன்றக் கலைப்பு குறித்து நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கும். எனவே யாரும் நீதிமன்றம் செல்லலாம். ஜூன் 2ஆம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றமாக இருக்காது” – என்றார்.