இரு கட்டங்களாகப் பொதுத்தேர்தல்! – தேர்தல் ஆணைக்குழு தீவிர ஆலோசனை

1 u
1 u

பொதுத்தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது.

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளபோதும், சுகாதார அமைச்சுச் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுவதாயின் அதற்குப் போதிய அளவு கால அவகாசம் இல்லை என்று ஆணைக்குழு கருதுவதாக அறியமுடிகின்றது.

வாக்காளர் அட்டை விநியோகம், வாக்களிப்போருக்கு விசேட மையை விரலில் சுகாதாரப் பாதுகாப்புகளுடன் இடுவது, தேர்தல் உத்தியோகத்தர்களுக்கான விசேட ஆடைகள், வாக்கெடுப்பு – வாக்கெண்ணும் நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உட்பட தேர்தல் ஏற்பாடுகளைச் செய்ய போதியளவு கால அவகாசம் உள்ளதா என்பது பற்றித் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.

நாளை கொழும்பில் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இந்த விடயங்கள தொடர்பில் தீவிரமாக ஆராயவுள்ளனர். தனி நபர் இடைவெளியுடன் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற வேண்டுமென்பதால் இரு கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.

அடுத்தடுத்த நாள்களில் தேர்தலை நடத்துவதற்குச் சட்டத்தில் இடமில்லை. வாக்களிப்பு நடந்தால் 14 நாள்களின் பின்னரே அடுத்த கட்ட வாக்களிப்பு நடக்க வேண்டும். வாக்கெண்ணும் விடயத்தில் சிக்கல் இருக்கக் கூடாது. இதுதொடர்பாக நாளை ஆணைக்குழு விரிவாக ஆராயும் என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமைகளால் பொதுத் தேர்தல் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து பிற்போடப்படுமா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.