தலைமன்னார் மீனவர்களுக்கு மீன்பிடிக்கத் தடை!

mannar
mannar

தலைமன்னார் கிராம மீனவர்களை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடற்படையினர் கடற்தொழிலுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை எனவும் இதனால் தாம் பொருளாதார ரீதியில் பாதீப்படைந்துள்ளதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பீற்றர் மடுத்தீன் ஊடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் பல வருடங்களாக தலைமன்னார் கடலில் உள்ள திட்டு பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தற்போது குறித்த திட்டு பகுதியில் தலைமன்னார் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த திட்டு பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் தலைமன்னார் கிராம மீனவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடற்தொழிலுக்குச் செல்லாத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் 12 திட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் குறித்த மீனவர்கள் திட்டு பகுதிக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றமை வழமை. கடற்படையினரின் குறித்த நடவடிக்கையினால் மீனவர்கள் தொடர்ந்தும் பாதீக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது பாஸ் நடமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், மீன் பிடி பாஸ் இருந்தால் மாத்திரமே தொழிலுக்கு செல்ல கடற்படை அனுமதிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இது வரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே கடற்படையினரின் குறித்த தடையை நீக்கி ஏனைய கிராம மீனவர்கள் போன்று தலைமன்னார் கிராம மீனவர்களும் சுதந்திரமாக கடற்தொழிலில் ஈடுபட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடையத் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை தொடர்பு கொண்டு வினவிய போது,

தலைமன்னார் கிராம மீனவர்கள் தமது பிரச்சினை தொடர்பான மன்னார் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பீற்றர் மடுத்தீன் ஊடாக எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக தலைமன்னார் கிராம மீனவர்கள் பல வருடங்களாக திட்டு பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கடற்படையினர் குறித்த பகுதியில் மீன் பிடிக்க அனுமதி மறுத்துள்ளனர்.

இலங்கையில் தலைமன்னார் கிராம மீனவர்கள் மாத்திரமே கடற்படையினரிடம் அனுமதி பெற்று தொழிலுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேறு எந்த மாவட்டத்திலும் பாஸ் நடைமுறை இல்லை.

தலைமன்னார் கிராம மீனவர்கள் கடற்படையினரினால் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்தொழில் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

இவ்விடையம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.