தனியொரு குடும்பத்திடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா? – ஹரீன் பெர்னாண்டோ கேள்வி!

hareen
hareen

தனியொரு குடும்பத்திடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா அல்லது மக்களுடன் நின்று சேவையாற்றும் சஜித்திடம் நாட்டின் பொறுப்பை வழங்கப்போகின்றீர்களா என்று தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் ராஜபக்ஷவாகவே இருப்பதை விரும்புகின்றீர்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஹப்புத்தளை நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிலர் பேஸ்புக் பக்கங்களில் சஜித் பிரேமதாசவை விமர்சிக்கின்றார்கள். பழைய இறப்பர் செருப்பும், அரச அலுவலக பதிவாளர் போன்ற ஆடையும் அணிந்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று அவர்கள் கேட்கின்றார்கள். ஆனால் இவற்றிலிருந்தே சஜித் பிரேமதாச பொதுமக்களின் சேவையாளன் என்பது தெளிவாகின்றது. அவருக்கு மாளிகை போன்ற இல்லங்களுக்கோ அல்லது வெளிநாட்டுக் கல்விக்கோ எவ்வித குறையும் இருக்கவில்லை. ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் சென்று சேவையாற்ற வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துக் களமிறங்கியிருக்கின்ற கோத்தா’பய’ (அச்சம்) என்ற மனிதர் அரசியலில் பிரதேசசபைத் தேர்தலில் கூட களமிறங்கியதில்லை. குறைந்தபட்சம் பிரதேசசபை நிர்வாகம் தொடர்பில் கூட அறியாத நபரொருவரால் இந்த நாட்டை சீரமைக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?

ஆனால் சஜித் பிரேமதாஸவிற்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுதான். அவரைப் பொறுத்தவரை இன,மத வேறுபாடுகள் எவையும் ஒரு பொருட்டல்ல. சஜித் பிரேமதாஸ அவருடைய தந்தையாரின் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் பின்பற்றி, அதே பாதையில் பயணிக்கின்ற ஒருவராவார் என்றும் அவர் கூறினார்.