52 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை : யாழ். மாவட்டத்தில் அதிகமானோருக்கு இல்லையாம்

1546141793 ID 2

தேசிய அடையாள அட்டை இல்லாத 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தொடர்பில்  தகவல் கட்டமைப்பொன்றினை பேணுமாறும்,  அவர்களுக்கு  உடனடியாக  தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்  உள் நாட்டலுவல்கள் அமைச்சு  அனைத்து பிரதேச செயலராளர்களுக்கும் அறிவித்துள்ளது.

எப்பிரியல் இளைஞர்களுக்கான வலையமைப்பும் இலங்கை இளம்  சங்கமும் தாம் இணைந்து வெளிப்படுத்திய தகவல்களை அமைச்சிடம் முன்வைத்து செய்த கோரிக்கைக்கு அமைய  உள் நாட்டு அலுவல்கள் அமைச்சு இதற்கான அறிவுறுத்தலை அனைத்து பிரதேச செயலர்களுக்கும்  வழங்கியுள்ளது.

எப்பிரியல் இளைஞர்களுக்கான வலையமைப்பு, ஜனநாயகத்தை நோக்கிய இளம் சட்டதரணிகளின் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தினர் மற்றும் ஜனநாயகத்தை நோக்கிய இளைஞர் சங்கத்தினர் ஒன்றிணைந்து  சுயாதீன அமைப்பாக செயற்பட்டு வருவதுடன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது 67 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 18 வயது பூர்த்தியாகியுள்ள 52 ஆயிரத்து 734 பேருக்கு இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும், மேலும்  264 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவ்வமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்ள 331 பிரதேச செயலகங்களுக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தொடர்பில் தகவல்கள் கோரப்பட்ட போதும் 67 பிரதேச செயலகங்களே தகவல்களை வழங்கியிருந்தன.

இத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் பல பிரதேச செயலக பகுதிகளில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் பிரகாரம் இலங்கை முழுதும் தேசிய அடையாள அட்டை இல்லாத 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் 5 இலட்சம் பேர் வரை உள்ளதாக மதிப்பீடு செய்யப்ப்ட்டுள்ளதாக எப்ரியல் அமைப்பின்  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தகவல்களை வழங்கியுள்ள பிரதேச செயலகங்களின் அடிப்படையில்,  அடையாள அட்டை இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக  யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  வலிகாமம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் வசிக்கின்றமை தெரியவந்துள்ளது. அந்த பிரதேச செயலக பிரிவில் 2440 பேருக்கு அடையாள அட்டை இல்லை என உத்தியோகபூர்வ தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ளது.

இதற்கு அடுத்ததாக  கரந்தெனிய பிரதேச செயலக பிரிவில் 1929 பேருக்கும்,  கெளனி பிரதேச செயலக பிரிவில் 1746 பேருக்கும் நொச்சியாகம பிரதேச செயலக பிரிவில்  1555 பேருக்கும்  பிங்கிரிய பிரதேச செயலக பிரிவில் 1706 பேருக்கும்  பண்டுவஸ் நுவர – ஹெட்டிபொல பிரதேச செயலக இரிவில் 1404 பேருக்கும்  18 வயதை அடைந்தும் தேசிய அடையாள அட்டை இல்லை என்பது தகவல் உரிமை சட்டத்துக்கு அமைய முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கான பதிவுகள் ஊடாக உத்தியோகபூர்வமாக தெரியவந்துள்ளது.

இதில் தகவல்களை வெளிப்படுத்தாத பிரதேச செயலக பிரிவுகள் 264 இல், தாம் அடையாள அட்டை இல்லாதவர்கள் தொடர்பில் தகவல் கட்டமைப்பை பேணவில்லை என அறிவித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

அதற்கமைய எப்பிரியல் இளைஞர்களுக்கான வலையமைப்பு , ஜனநாயகத்தை நோக்கிய இளம் சட்டதரணிகளின் சங்கம் , இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தினர் மற்றும் ஜனநாயகத்தை நோக்கிய இளைஞர் சங்கத்தினரே ஒன்றிணைந்து  இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு , மனித உரிமைகள் ஆணைக்குழு , அரச நிர்வாகம் மற்றும் ஆட்பதிவுகள் திணைக்களத்திற்கும் கடிதமொன்றை கடந்த ஜூன் 10 ஆம் திகதி அனுப்பியுள்ளனர்.

 இவ்வாறான நிலையிலேயே தற்போது, தேசிய அடையாள அட்டை இல்லாத 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் தொடர்பில்  தகவல் கட்டமைப்பொன்றினை பேணுமாறும்,  அவர்களுக்கு  உடனடியாக  தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்  உள் நாட்டலுவல்கள் அமைச்சு  அனைத்து பிரதேச செயலராளர்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.