நீதியின் வழியில் அரசு; ’20’ நிறைவேறியே தீரும்- கோட்டா அதீத நம்பிக்கை!

Sagara 4296 1068x712 1 1
Sagara 4296 1068x712 1 1

“மக்களின் ஆணைக்கேற்ப எமது அரசு நீதியின் வழியில் செயற்படுகின்றது. எனவே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு அரசுக்குப் பாதகத்தை ஏற்படுத்தாது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவு ஏதோவொரு வழியில் நிறைவேறியே தீரும்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஆளுந்தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“20ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ள எதிரணியினர் வீதிகளில் இறங்கியும் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரசை மிரட்டும் பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எதிரணியினரின் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் எமது அரசு அடிபணியாது. மக்களின் ஆணைக்கேற்ப எமது அரசு நீதியின் வழியில் செயற்படுகின்றது. எனவே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு அரசுக்குப் பாதகத்தை ஏற்படுத்தாது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு ஏதோவொரு வழியில் நிறைவேறியே தீரும். அதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை.

நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்கள் சிலரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.  

அரசின் கூட்டணியில் இருக்கும் பங்காளிக் கட்சிகளில் ஒரு சிலர் அதிருப்தியில் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. வலுமைமிக்க அமைச்சுப் பதவிகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை. அதற்காக பங்காளிக்  கட்சிகளில் உள்ளவர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர் என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது” – என்றார்.