ஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா?

123456
123456

இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் யுத்தத்தை என்னவென்று எடுத்துக்கொள்ளுவது? அதை எப்படி நேர்மையோடு அணுகுவது? அதன் உண்மை தன்மை என்ன? யாருடைய பார்வையில் இருந்து இலங்கை இனப்பிரச்சினையையும் இங்கே நிகழ்ந்த போரையும் பார்க்க வேண்டும்? இப்படி பல்வேறு விதமான கோணங்கள் இருக்கின்றன. எப்படி இருந்தாலும் ஒரு தீவுக்குள் போராடத் துணிந்த மக்கள் சமூகத்தின் அல்லது இனவழிப்பை சந்தித்த மக்கள் சமூகத்தின் கருத்து என்பதே முக்கியமானது.

இலங்கையை இனப்பிரச்சினையை குறைந்த பட்சம் அந்த மக்களின் பார்வையில் இருந்து பார்ப்பது அடிப்படையை புரிந்துகொள்ளவும் சிக்கலைத் தீர்க்கவும் உதவும். இப்படியொரு சூழலில்தான், ஈழத்தில் 2020 மாவீரர் நினைவேந்தல் காலம் என்பதையும் அணுக வேண்டும். இலங்கைத் தீவில் இன உரிமை சமத்துவமின்மை நிலவியமை காரணமாக, இனப் போர் நிகழ்ந்தது என்பதும், தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர் என்பதும் அவரவர் பார்வையில் சரிபிழைகளைக் கடந்த ஒரு நிதர்சனமான வரலாறு ஆகும்.

எப்போதும் ஒரு நிகழ்வில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள் இருக்கலாம். ஆனால் நடந்த நிகழ்வு என்பது வரலாறு ஆகும் போது அதன் உண்மை தன்மையுடன் அதனை ஏற்றுக்கொள்ளுவதே சிறந்த பண்பாக இருக்கும். அந்த வகையில் ஈழத்தில் முப்பது ஆண்டுகளாக தனித் தமிழ் ஈழம் கோரிய போராட்டம் ஒன்று நடந்தது. அதில் லட்சக்கணக்கான போராளிகள் போராடியுள்ளனர். அதில் பல்லாயிரம் போராளிகள் களச்சாவு அடைந்துள்ளனர்.

கடந்த முப்பது ஆண்டு கால வரலாற்றில் ஈழத் தமிழர்களின் பண்பாட்டில் பலவிதமான மாற்றங்களும் இற்றைப்படுத்தல்களும் நிகழ்ந்துள்ளன. அது போன்றே சிங்கள தேசத்திலும் நிகழ்ந்திருக்கக்கூடும். அதைப்போலவே போர்க்களத்தில் மாண்ட பிள்ளைகளை நினைவுகூரும் மாவீரர் நாளும் தமிழர் தம் வாழ்வில் ஒரு பண்பாடு ஆக கலந்துள்ளது. துயரங்களை துடைக்கும் வேதனைகளை வெளிப்படுத்தும் ஒரு பண்பாட்டு நிகழ்வே இது. நாம் எப்போதும் பண்பாட்டின் வழியாக ஒரு கூட்டிணைவை ஏற்படுத்துகின்றோம். அது ஆற்றுப்படுத்தல்களையும் துயர் களைதலையும் கூட நமக்கு ஏற்படுத்துகிறது.

எமது முன்னோர்கள் எப்போதும் சமூக மயப்படுத்தல் என்கிற நோக்கிலேயே பண்பாட்டு அம்சங்களை உபயோகப்படுத்தியுள்ளனர். மாவீரர் நாளில் துயிலும் இல்லங்களில் போரில் மாண்ட பிள்ளைகளுக்கு விளக்கேற்றி, அழுது அஞ்சலி செய்வது என்பது, இழப்புக்களையும் காயங்களையும் ஆற்றுப்படுத்துகின்ற ஒரு இனத்தின் கூட்டு வழிமுறையே. காயங்களையும் வலிகளையும் மூடுவதை விட அவற்றை வெளிப்படுத்துவதே அதிலிருந்து விடுபடச் செய்கிற வழிமுறை என்றே உளவியலாளர்கள் கூறுகின்றனர். மாவீரர் நாள் காலத்தின் வழியே கடந்து செல்ல முனைகின்ற ஒரு துயர் களைதலே. அப்படிப் பார்க்கையில் மாவீரர் நாளைத் தடுப்பது என்பது தமிழ் மக்களின் உள நெருக்கடிகளை உளத்துயரை அதிகப்படுத்தும் ஒரு செயலாகவே இருக்கின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு முதன் முதலாக போருக்குப் பிறகு மாவீரர் நாள் நிகழ்வு வடக்கு கிழக்கில் இடம்பெற்றது.

அத்துடன் இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டும் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நான்கு ஆண்டுகளிலும் மாவீரர் நாள் என்பது ஒரு அரசியல் நிகழ்வாக அல்லாமல், தனிநாட்டுக்கான போராட்டமாக அல்லாமல், கண்ணீரும் பூக்களும் கதறலும் நிரம்பியவொரு துக்க நாளாகவே நடந்தது. இலங்கை அரசுடனான போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அரசின் பார்வையில், பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஈழத் தமிழ் தாய்மார்களின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்பது மாற்ற முடியாத உண்மை.

அவர்கள் ஏதோவொரு நியாயத்தின் பொருட்டு இந்த மண்ணில் மடிந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுவதே சிங்கள மக்களின் புதிய அணுகுமுறையாக இருக்க வேண்டும். அந்தப் பிள்ளைகளுக்காக கூடி அழுவது மக்களின் அடிப்படை உரிமை. போரில் இறந்த எவரையும் நினைவு கூர்வது மற்றும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற உரிமை என்பது போருக்குப் பிந்தைய காலத்தில் இன நல்லிணக்கங்களுக்கான வழிமுறையாக கொள்ளப்படுகின்றது. உண்மையில் இன்றைய அரசாங்கம், இன நல்லிணக்கத்தின் மீது மெய்யான பற்றுக் கொண்டுள்ளதெனில் போரில் மாண்ட தமிழ் பிள்ளைகளை நினைவு கூர இடமளித்திருக்க வேண்டும். மாறாக இந் நினைவேந்தலை தடுப்பதன் மூலம், அரசின் மீதும் சிங்கள மக்களின் மீதும் தமிழ் மக்கள் வெறுப்பு கொள்ள ஏதுவாகின்ற சூழலே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 போரில் ஈடுபட்ட இராணுவத்தினரை நினைவு கூர முடியும் என்றால், அரசுக்கு எதிராக போராடிய ஜே.வி.பி வீரர்களை நினைவுகூர முடியும் என்றால், ஏன் போரில் இறந்த புலிகளை நினைவுகூர முடியாது. அவர்கள் தமிழர்கள் என்பதினாலா? ஆக நினைவுகூருகின்ற உரிமை விடயத்தில்கூட இனப் பாரபட்சம்தான் நிலவுகின்றதா? இதன் விளைவுகள் இத் தீவில் இன உறவில் இன்னுமின்னும் விரிசலையல்லவா ஏற்படுத்தும்? 2009 போரில் விடுதலைப் புலிகளை வென்ற அரசினால் அன்று துவக்கம் இன்றுவரை தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை என்பது பலரும் அறிந்த உண்மை.அதற்கு காரணமாக மக்கள் சொல்லுகின்ற காரணங்களில் ஒன்றுதான்

‘2009இல் துயிலும் இல்லங்களை அழித்தமை’ என்ற தவறான அணுகுமுறை. உண்மையில் துயிலும் இல்லங்களை அழிக்காமல் விட்டிருந்தால் தமிழ் மக்கள் அரசுமீது கொண்ட  வெறுப்பு குறைந்திருக்கலாம். இப்போதும்கூட மாவீரர் நினைவேந்தலை அனுமதித்திருந்தால் அது இன நல்லிணக்கத்திற்கு ஒரு பாதையாக அமையக் கூடும். அதைவிடுத்து மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்வதை தடுப்பதற்கு அரசு கையாளுகின்ற வழிமுறைகளும் உபாயங்களும் உண்மையில் தமிழ் மக்களை பெரும் உள அழுத்திற்கு தள்ளக்கூடியது. இத் தீவில் இன விரிசல்களை ஏற்படுத்துகின்ற இன மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்ற அணுகுமுறை. சர்வதேச பார்வைகளுக்கு மாறான இந்த அணுமுறை அரசிற்கு பாதகமான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றே பலரும் எச்சரிக்கின்றனர். போரில் பிள்ளையை இழந்த தாயின் ஈனக் கண்ணீரால் இந்நாடு இரண்டாகி விடும் என்று சொல்வது எல்லாம் எவ்வளவு வேதனையான அணுகுமுறையாக இருக்கும்?

 தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்27.11.2020