சுமந்திர நீக்கமா? தமிழ் தேசிய நீக்கமா? கூட்டமைப்பின் முடிவு என்ன?

sumanthiran 1
sumanthiran 1

ஆயுதப் போராட்டத்தையும் அதை இறுதிவரை முன்னின்று நடாத்திய விடுதலைப் புலிகளின் தலைமையையும் கொச்சைப்படுத்தியுள்ள சுமந்திரன்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா என்பதே பலரதும் இப்போதைய கேள்வியாகும். தமிழ் மக்களை பெரும்கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ள சுமந்திரன் பேச்சு, சுமந்திர நீக்கத்தையும் கடுமையாக வலியுறுத்தியுள்ளது. அதனை செய்யத் தவறினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழலே ஏற்படும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகால பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக ரெலோ அமைப்பு இதனை கடுமையாக கண்டித்துள்ளது. சுமந்திரன் கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஆயுதப் போராட்டத்தின் வழி தமிழ் இளைஞர்கள் பெரும் தியாகங்களை புரிந்துள்ளனர் என்றும் அதனாலேயே தமிழர் பிரச்சினை உலகமயமானது என்றும் அதன் தலைவர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமின்றி சுமந்திரனின் இதுபோன்ற செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தலமையை வலியுறுத்தியுள்ளார் செல்வம். தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, ரெலோ அமைப்பு உள்ளீர்க்கப்பட்டது. அன்றைய காலத்தில் பங்காளிக் கட்சியாகி, இன்றுவரை உறுப்பு வகிக்கும் ஒரே ஒரு கட்சியாக ரெலோ அமைப்பு மாத்திரமே உள்ளது. சுமந்திரனின் பேச்சு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கத்தை பாழாக்கும் என்றும் செல்வம் எச்சரித்துள்ளார்.

புலிகளால் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டமைப்பில் பல்வேறு விமர்சனங்களால் பங்காளிக்கட்சிகள் பலவும் பிரிந்துள்ள நிலையில் ரொலோவின் கோரிக்கையை கூட்டமைப்பு தலைமை ஏற்குமா? இப்போது கூட்டமைப்பு தலைமையிடம் உள்ள ஒரே தெரிவு இதுதான். சுமந்திரன் நீக்கமா? அல்லது தமிழ் தேசிய நீக்கமா? இனியும் சுமந்திரன்மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக தமிழ் தேசிய நீக்கத்திற்கு உள்ளாகி, தமிழ் துரோகக் கட்சியாக உருமாற்றம் செய்துகொள்ளும் தவிர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

இந்த நிலையில் சுமந்திரன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, ஆயுதப் போராட்டத்திற்கும் அதனை இறுதிவரை வழிநடாத்திய தலைமைக்கும் அகொளரவத்தை ஏற்படுத்தும் செயறபாடுகளுக்கு பணியாது உறுதியான கொள்கையுடன் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனை உலகத் தமிழர்கள் பாராட்டி வருகிறார்கள். அத்துடன் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் இதனைக் கண்டித்துள்ளார்.

அத்துடன் சாள்ஸ், சிறிநேசன், சிவமோகன், யோகேஸ்வரன், அரியநேந்திரன் போன்ற கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சுமந்திரன் கருத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுமந்திரனின் கருத்து, உள்கட்சி மட்டத்திலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுமந்திரன் இவ்வாறு கூறியிருப்பது தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கட்சிக்குள் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி சுமந்தரனால் வெளியேற்றப்பட்டவர்களும் வெளியேறியவர்களும்கூட விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அவரது பேச்சை கடுமையாக கண்டித்துள்ளனர். சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்கும் பட்சத்தில் இவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. சுமந்திரன் ஏன் நீக்கப்பட வேண்டியவர் என்பதை அவரது வாயாலேயே வெளிப்படுத்தியுள்ளார்.

சுமந்திர நீக்கம் தமிழ் தேசிய அரசியலை வலுப்படுத்தும், அதனை செய்ய மறுத்தால், தமிழ் தேசிய நீக்கத்திற்கு கூட்டமைப்பு உள்ளாகும். சுமந்திரனின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிக்கும் எதிர்க்கும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய தலைமயை புனரமைக்க இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும்.