சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / பிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர்! எம்.கே. சிவாஜிலிங்கம்
sivajilingam 1
sivajilingam 1

பிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர்! எம்.கே. சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் தேசிய தலைவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதை தான் மீண்டும் மீண்டும் கூறுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தான் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உட்பட அனைவருக்காகவும் தொடர்ந்தும் விளக்கேற்றுவேன்.

நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த பிடியாணையை பயன்படுத்தி என்னை கைது செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிப்பேன் என்ற அச்சம் காரணமாகவே வல்வெட்டித்துறை பொலிஸார் என்னை கைது செய்தனர்.

1987 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 5 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு கரும்புலிகள் படையை ஆரம்பித்தது. அன்றைய தினம் மில்லர் என்ற புலிகளின் உறுப்பினர் யாழ்ப்பாணம் நெல்லியடி இராணுவ முகாம் மீது முதலில் தற்கொலை தாக்குதலை நடத்தினார். அதற்காகவே கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நான் கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்க போகிறேன் என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனால், நீதிமன்றம் முன்னர் பிறப்பித்திருந்த பிடியாணையை பயன்படுத்தி வல்வெட்டித்துறை பொலிஸார் என்னை கைது செய்தனர்.

அந்த பிடியாணை 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தது. திருவில் மைதானத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியமை தொடர்பான வழக்கில் அந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த பிடியாணையை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று பயன்படுத்திக்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தமிழீழத்திற்காக போராடினர். பிரபாகரன் தமிழ் மக்களின் தலைவன் என்ற காரணத்தினாலேயே இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் கூட அவருடன் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் மாத்திரமே தமிழ் மக்களின் தேசிய தலைவர். தமிழ் மக்களின் இந்த உணர்வை எவராலும் மாற்ற முடியாது.

தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அந்த மக்களின் சுதந்திரத்திற்காக ஜனநாயக ரீதியான நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.

தமிழ் மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த, அவர்கள் கௌரவமான இனமாக வாழ வேண்டுமாயின், அந்த மக்கள் தனித்து தீர்மானங்களை எடுக்கக் கூடிய சுயாட்சி கட்டமைப்புடன் கூடிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்.

நாங்கள் அன்று போல் இன்றும், நாளையும் எதிர்காலத்திலும் பிரபாகரன் தலைமையில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை மாத்திரமல்லாது கொல்லப்பட்ட பொது மக்களுக்காகவும் விளக்கேற்றுவோம்.

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விளக்கேற்றுவது குற்றமல்ல. எங்களை எவராலும் நிறுத்த முடியாது எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

x

Check Also

1202

வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பலி!

அனுராதபுரம் – பாதெனிய வீதி கல்கமுவ – புதுறுவகந்த பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன ...