சதிகாரக் கும்பலிடமிருந்து ஐ.தே.கவை மீட்கத் தயார்! – ஐக்கிய மக்கள் சக்தி

 மக்கள் சக்தி
மக்கள் சக்தி

“ஐக்கிய தேசியக் கட்சியில் சிலர் அரசுடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்துகொண்டு தேர்தலின்போது ஐ.தே.கவைத் தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், இந்தச் சதிகாரக் கும்பலிடமிருந்து ஐ.தே.கவை மீட்பதற்காகவும் தயாராக இருக்கின்றோம்.” சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

கபீர் ஹாசீம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அது நீதிக்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, 1994ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஐ.தே.கவைச் சேர்ந்த சிலர் அரசுடன் டீல் செய்துகொண்டு ஐ.தே.கவை தோல்வியடையச் செய்வதற்கான வழியை அமைத்து வருகின்றனர். இவர்களிடமிருந்து ஐ.தே.கவை மீட்டெடுப்பதோடு மாத்திரமன்றி பொதுத் தேர்தலையும் வெற்றிகொள்வோம்.

கொரேனா வைரஸ் மத்தியிலே அரசு முறையான முகாமைத்துவம் இன்றி பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிகொண்டு மக்களுக்கு நலன்களை பெற்றுக்கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும். தற்போது ஐ.தே.க. எமக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவைத்து விட்டு தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், தேர்தலுக்குப் பின்னர் அவர்களுக்கு பதிலளிக்கவும் தயாராகவுள்ளோம்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

லக்ஸ்மன் கிரியெல்ல

“ஐ.தே.வின் மத்திய செயற்குழுவின் அனுமதியுடனே சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைச் சட்டவிரோதமான உருவாக்கியுள்ளதாக ஐ.தே.க. முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக எம்முடன் இணைந்து செயற்படும் அனைத்துப் பிரதேச சபை உறுப்பினர்களினதும் பதவியையும், அவர்களினது உறுப்புரிமையையும் பாதுகாப்பதற்காக அவர்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவோம். எமது கட்சியில் பல சட்டதரணிகள் இணைந்துகொண்டுள்ளனர். அவர்கள் ஊடாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

எமது மனச்சாட்சிக்கமையவும், மக்களின் நலனைப் பாதுகாக்கவுமே இன்று நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கமையவே சஜித் பிரேமதாஸவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளோம்.

ஐ.தே.கவில் சிலர் அரசுடன் இணைந்து செயற்படவே தயாராக இருக்கின்றனர். அவர்களது கருத்துக்களிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே நாங்கள் விலகி வந்துள்ளோம்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ரஞ்சித் மத்தும பண்டார

“ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியிருந்ததுடன், அதற்கு அனுமதி வழங்கி அவர் கையொப்பமிட்ட கடிதமும் எம்மிடம் உள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் இது தொடர்பில் பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார். அதனால் ஐக்கிய மக்கள் சக்தி சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது இருக்கின்றவர்கள் அரசிடம் டீல் செய்துகொண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைத் தோல்வியடையச் செயற்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.