ஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதி!

8 ad 2
8 ad 2

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க, அவரது மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதிக்கப்படும் என தெரிய வருகிறது.

தற்போது நீர்கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், விசேட நோயாளர் காவு வண்டியில் அழைத்து செல்லப்படவுள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானின் மகள்களில் ஒருவரான நாச்சியார், ஓமானின் மஸ்கட்டில் வைத்தியராக பணிபுரிகிறார். ஆறுமுகன் தொண்டமான உயிரிழந்தபோது, அவர் ஓமானில் தங்கியிருந்தார்.

இதையடுத்து தந்தையில் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவர் முயற்சிகள் மேற்கொண்டார். இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொள்வதில், தனிமைப்படுத்தல் சட்டங்கள் தடையாக இருந்தன.

ஓமானிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை. விசேட ஏற்பாடாக, இந்தியாவின் கொச்சிக்கு, இந்தியர்களை ஏற்றிச் சென்ற விமானமொன்றில் அவர் கொச்சிக்கு சென்றிருந்தார்.

அங்கிருந்து, வாடகை விமானமொன்றை ஏற்பாடு செய்து கட்டுநாயக்கவை வந்தடைந்திருந்தார். அங்கிருந்து அவர் நீர்கொழும்பிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று நோர்வூட்டில் நடக்கும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, அவருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கில் 20 நிமிடம் அவர் கலந்து கொள்வார். அந்த சமயத்தில் பிறர் அங்கிருக்க மாட்டார்கள். விசேட நோயாளர் காவு வண்டியில் அவர் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.