நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன் – மஹேல

Mahela

நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவிற்குச் சென்ற மஹேல ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நேற்றிரவு 11.30 மணியளவில் இன்றைய தினம் விசாரணை பிரிவில் முன்னிலையாக வேண்டாம் என எனக்கு அறிவிக்கப்பட்டது.

தனிப்பட்ட காரணமாக விசாரணை பிரிவில் முன்னிலையாகவில்லை என நான் அறிவித்துள்ளதாக இன்று காலை  சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகின.

இதன் காரணமாகதான் நான் இன்று காலை விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு அறிவித்துவிட்டு இவ்விடத்திற்கு வந்தேன். நான் பொறுப்புடையவன் என்றவகையில் அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். அவர்களே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்ததோடு மாத்திரமின்றி பிறிதொரு தினத்தை பெற்றுத்தருவதாகவும் அறிவித்தனர்.

நான் தெரிவிக்காதவற்றை பிழையான முறையில் வெளியிட வேண்டாம் என தயவு செய்து கேட்டுக்கொள்கின்றேன். இலங்கையில் கிரிக்கட் விளையாட்டை எதிர்காலத்திலும் முறையாக கொண்டு செல்ல எனக்கு பொறுப்பிருக்கின்றது. இயலுமானவரையில் நான் எனது ஒத்துழைப்பை விசாரணைகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு வழங்க காத்திருக்கின்றேன். பொறுத்திருந்து பார்க்கலாம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று. நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அழுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி, குறித்த பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு மஹேல ஜயவர்தனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அதன் பின்னர் இன்றைய தினம் விசாரணை குழுவில் முன்னிலையாக வேண்டாம் என மஹேலவிற்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.