சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு தேர்தல் வெற்றியின் பின் பிள்ளையான் வெளியில் வருவார்

01 1 2
01 1 2

பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

01 4

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை ஆதரித்து வாழைச்சேனை பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

01 6

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களுடைய தமிழ் மக்களை குறிப்பாக கிழக்கு மக்களை போலி தேசியம், போலி உணர்வினை ஊட்டி ஏமாற்றிக் கொண்டு, திசை திருப்பிக் கொண்டு வந்திருந்தார்கள்.

01 3

இன்றைய காலத்தில் தமிழ் மக்கள் விழித்துள்ளார்கள் என்றே கூற வேண்டும். எமது கட்சி சார்ந்து பல துறைசார்ந்த கல்வி மான்கள் எங்களுடன் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதை அவதானிக்கலாம். கிழக்கினை கொண்ட புத்திஜீவிகள் ஒவ்வொருவரும் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். இதனால் தலைவரின் சிந்தனைக்கமைய எங்களது வெற்றிக்கு எங்களோடு கைகோர்த்து உள்ளனர்.

எதிர்வரும் காலத்தில் கிழக்கு மண்ணில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாத்திரம் தான் சிறந்த கட்சி என்று ஒவ்வொரு தமிழனும் உணரும் வகையில் சிகரத்தினை தொடும் என்பதே உண்மையாகும். தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்கின்ற சிந்தனையை எங்கள் மக்கள் தகர்த்து எறிந்துள்ளனர்.

எமக்கு கிடைத்த சந்தர்பத்தினை ஒவ்வொரு மக்களும் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். கடந்த காலத்தினை விட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு பெருகி உள்ளது என்றே கூறவேண்டும். மட்டக்களப்பு மக்களின் உரிமைகள், சுதந்திரத்தினை நிலை நாட்டக் கூடிய, தட்டிக் கேட்கக் கூடிய தலைவர் என்றால் பிள்ளையான் மாத்திரமே வேறு யாரும் கிடையாது.

01 7 1

எனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானின் வரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, வெற்றியின் ஊடாக சிறைக்கதவுகள் உடைக்கப்படும் என்பதேயாகும். எனவே தலைவரின் விடுதலைக்கும், வெற்றிக்கும் அனைவரும் கை கோர்த்து நிற்க வேண்டும் என்றார்.

01 12

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அமைப்பாளர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டதுடன், கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தாயார் கலந்து கொண்டவர்களுக்கு மகனின் வெற்றிக்கு ஆதரவு வேண்டி தேர்தல் விஞ்ஞாபனத்தினை வழங்கி வைத்தார்.