சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை!
Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions Anil Jasinghe
Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions Anil Jasinghe

வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் மிக சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் நாட்டுக்குள் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால், தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க, பிரதிச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் குழுவின் பிரதானி நீல் நித்தவெல்ல உட்பட நாடாளுமன்ற திணைக்கள அதிகாரிகளை இன்று முற்பகல் சுகாதார அமைச்சில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்றம் கூடும் நேரங்களில் சுகாதார பாதுகாப்பு முறைகளை கையாண்டு கூட்டங்களை நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்க சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றம் பொதுத் தேர்தலில் பின்னர் கூடும் முதல் நாளில் புதிய சபாநாயகரை தெரிவு செய்யவும் சத்தியப் பிரமாணம் செய்யவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டியது அத்தியவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் அடுத்த கூட்டங்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க முடியும்.

இதனால், முதல் நாள் நாடாளுமன்றம் கூடும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஊழியர்களும் சுகாதார பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதால், சுகாதார அதிகாரிகளிடம் சரியான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் எனவும் தசநாயக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துதல், உடல் உஷ்ணத்தை அளவிடுதல் உட்பட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டங்கள் இணையத்தளம் வழியாக நடத்தப்படுகின்றன எனவும் நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் கம்லத் உட்பட குழுவில் நாடாளுமன்றத்திற்கு சென்று அவையில் இருக்கைகள், உணவகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர், சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழங்க உள்ளனர்.

இந்த சந்திப்பில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு சம்பந்தமான வழிக்காட்டல்கள் அடங்கிய நூல்களும் நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

x

Check Also

1871d35b 6ba9 4e1d ab30 b8725a7b8f2d

இனப்படுகொலைக்கான நீதியே நிரந்தர தீர்வுக்கும் வழிவகுக்கும்! முள்ளிவாய்க்காலில் விக்னேஸ்வரன் உறுதி

“தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால் போரில் இறந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ...