தனிமைப்படுத்தல் இல்லை- யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 70 பேரும் விடுவிப்பு

Jaffna Teaching Hospital

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 7ஆம் திகதி நாடு திரும்பிய ஒருவர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றார். கடந்த 25ஆம் திகதிவரை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என்று சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அவர் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மீள மாற்றப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வடக்கு மாகாண சுகாதாரக் குழு நேற்று கூடியது. அதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதி விவகாரம் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசலகூடத்தைப் பயத்தினார் என்றும் வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்தார் என்றும் தகவலளிக்கப்பட்டது.

அதனால், ஆபத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதிவரை சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் அவர்களைக் கண்டறிந்து சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் பணி நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாணம் மற்றும் பொலநறுவை, குருநாகல் என சுமார் 70 பேர் இவ்வாறு அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிக்கு அங்கு மீளவும் இரண்டு தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு தடவைகளும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.