உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை

h
h

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா என்ற மத்துமகே லசந்த சந்தன பெரேரா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும் அந்த நாட்டின் அரசாங்க நிறுவனங்கள் ஊடாக அது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் கடந்த மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்ததாக அந்த மாவட்டத்தின் காவற்துறையினர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இலங்கை பெண்ணொருவர் உள்ளிட்ட இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவ்வாறான சம்பவம் ஒன்று இதுவரை அறியக்கிடைக்கவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தலைமறைவாகியுள்ளமை தொடர்பான தகவல்களும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான தகவல்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் அந்த தகவல்கள் ஊடாக அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அங்கொட லொக்கா இந்தியாவில் ஆர்.பிரதீப் சிங் என்ற போலியான பெயரில் தங்கியிருந்ததாக கோயம்புத்தூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜீன் மாதம் 3 ஆம் திகதி கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது மரணம் தொடர்பில் போலியான மருத்துவ சான்றிதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் அதிகாரிகள் எந்த வித சோதனைகள் முன்னெடுக்கவில்லை என அந்த நாட்டின் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

புலனாய்வு தகவல்களின் படி கோயம்புத்தூரில் அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் இலங்கை காவற்துறையினர் இந்திய காவற்துறையினரின் உதவியை கோரியதை அடுத்து அது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையிலேயே அவர் இந்தியாவில் ஆர்.பிரதீப் சிங் என்ற பெயரை மாற்றி தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் அங்கொட லொக்கா உயிரிழந்த பின்னர் அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.