திருமலையில் ஓர் ஆசனத்தை தக்கவைத்தது தமிழரசுக் கட்சி

Tamil arachu kadchi

2020 நாடாளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது.

86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த முறை 38 ஆயிரத்து 463 வாக்குகளை (ஆசனம் 1) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருந்தது.

இதேவேளை, அங்கு இம்முறை சில மாற்றுக் கட்சிகள் (தமிழ்க் கட்சிகள்) போட்டியிட்டதால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி கடந்த முறை 45 ஆயிரத்து 894 வாக்குகளைப் (ஆசனம் 1) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த முறை 83 ஆயிரத்து 638 வாக்குகளைப் (ஆசனம் 2) பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை 2 ஆயிரத்து 756 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது.