உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது வீரமுனை படுகொலை நினைவேந்தல்!

dfg 62
dfg 62

வீரமுனைப் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்தப் படுகொலையை நினைவுகூர்ந்து வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வீரமுனைப் படுகொலை என்பது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வைக் குறிக்கும்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும்வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை வளவினுள்ளும் 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12ஆம் திகதி  இவற்றினுள் புகுந்த ஊர்காவல் படைக் கும்பல் ஒன்று 400 இற்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்வித தகவலும் இல்லை.