பாராளுமன்ற ஒன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் இறுதி நாள் இன்று

1578042784 Parliament 2

பாராளுமன்றத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப்படிவம் மூலம் உறுப்பினர்களின் தகவல்களை பெறுவது வெற்றிகரமாக அமைந்திருப்பதாக,  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார். 

அதன்படி ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 175 உறுப்பினர்கள் இதுவரை அவர்களின் தகவல்களை ஒன்லைன் முறைமையூடாக (Online Registration System) பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.  

எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் இந்த தகவல்கள் அவசியம் எனவும், இதுவரை தகவல்களை வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றையதினத்துக்குள் (சனிக்கிழமை) விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தகவல்களை வழங்குமாறும், செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.  

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 11ஆம் திகதி அலரி மாளிகையில் தனது பணிகளை பொறுப்பேற்ற பின்னர் பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தமது தகவல்களை வழங்கியதை அடுத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது