கோட்டாபயவை விமர்சித்ததாக சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு எதிர்ப்பு

3 fgf
3 fgf

புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்தமை குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம், இன்று  கொழும்பு-7, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதன்போது பிரித்தானிய தூதரகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ‘தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர்’ என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

குறித்த கடிதத்தில், “இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலைப் LTTE பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் இன ஒழிப்புக்கு கடந்த 17ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்பு கூறக்கூடிய இராணுவத் தலைவர் என குறித்த செய்திச்சேவை விமர்சித்தமைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

உண்மையில் இறுதி யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்கினார்கள்.

இதேபோல் இலங்கை ஆயுதப் படைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை குறித்த பிரித்தானிய செய்தி நிறுவனம் பல தடவைகள் வெளியிட்டு வந்துள்ளது.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பாதுகாக்கும் வகையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.