நாடு முழுவதும் சுமார் 6000 பேர் பாதிப்பு

5 nj
5 nj

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதே வேளை, சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு காரணமாக தொடர்ந்தும் அநேக மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அனைத்து செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மீளாய்வு ஆகியன பிரதமரின் தலைமையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1609 குடும்பங்கள் பாதிப்பு

இதே வேளை,சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 1609 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 904 பேர் நேற்றுவரை பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்று தெரிவித்தார்.

மண்சரிவு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளபோதும் மண்ணில் புதையுண்டு காணாமற்போன மேலுமொரு நபர் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அடை மழை மற்றும் கடுங் காற்று காரணமாக 242 குடும்பங்களைச் சேர்ந்த 915 பேர் 14 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 05 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 03 வீடுகள் முழுமையாகவும் 169 வீடுகள் பகுதியளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.