கொன்சவேர்டிவ் கட்சியின் அரசியல் நாடகம்

0 3
0 3

இலங்கையில் இரண்டு இராஜ்ஜியங்கள் உருவாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என்ற கொன்சவேர்டிவ் கட்சியின் நிலைப்பாடானது, அரசியல் நாடகத்தையே வெளிக்காட்டுவதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரட்ன, சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஜெனிவா தீர்மானத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகும்.

ஆனால், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை. அத்தோடு, நேரில் பார்த்ததைப் போன்றுதான் ராஜித சேனாரட்ன கருத்து வெளியிட்டிருந்தார்.

எனவே, அவரிடம் சாட்சிப் பெற்றுக்கொள்வதும் முக்கியமானதாகும். இவரது இந்தக் கருத்துக்கள் சர்வதேச ரீதியாக அரசாங்கம் தொடர்பான பிழையான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு இலங்கை தொடர்பான தேவையில்லாத மற்றும் பொய்யான கருத்துக்கள் ஏற்பட்டமைக்கு இவரும்தான் பொறுப்புக்கூறவேண்டும்.

இதுதொடர்பாக இவரிடம் நிச்சயமாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம் இன்னுமொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அதாவது பிரித்தானியாவின் கொன்சவேர்டிவ் கட்சியின் பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் 53 ஆவது பக்கத்தில், இலங்கையில் இரண்டு இராஜ்ஜியங்கள் உருவாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இவர்கள்தான் அன்றிலிருந்து ஜனநாயகம் தொடர்பாக பேசி வருகிறார்கள். இலங்கைக்கு எதிராக இவர்கள் இவ்வாறு செயற்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.

இதுதொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது முற்றுமுழுவதும் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகமாகும்.

அத்தோடு, இந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரிவினைவாதிகள் தோல்வியடைந்துள்ளார்கள். இதனை அனைவரும் உணர்வார்கள்.

நாம் 30 வருட யுத்தத்தையே இல்லாது செய்தவர்கள். எம்மால் எதிர்காலத்தில் சிறப்பான ஆட்சியை கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தற்போது பொதுத் தேர்தலுக்குத்தான் நாம் ஆயத்தமாகி வருகிறோம். பெறும்பாலும் எமது வெற்றிச் சின்னத்தில்தான் நாம் களமிறங்குவோம். இதில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாது என நாம் உறுதியாக நம்புகிறோம்” என மேலும் தெரிவித்தார்.