மூன்று வேளை உணவே தமிழர்களுக்கு போதும்; சொல்கிறார் ராஜபக்ஷ அமைச்சர்

prasanna 1
prasanna 1

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலையையே வடக்கு தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே, இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன. வடக்கு மக்களின் உற்பத்திகளை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உருவானது.

போருக்குப் பின்னர் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு மேல் மாகாணத்தில் இருந்த தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு என்ன நடந்தது?எல்லாம் நிறுத்தப்பட்டன.

நல்லாட்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். ஆனால், வடக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.தெற்கு மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் அங்கு குரோத மனப்பான்மையை உருவாக்கியிருந்தனர். அங்குள்ள மக்களிடம் நாம் உரையாடினோம்.

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலை உருவாகுவதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், புலம்பெயர் அமைப்புகளுக்கும் சோரம் போயுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தான் வடக்கு மக்களைக் குழப்பியுள்ளனர்.

எனவே,இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலை தூக்கவும் இடமளிக்கமாட்டோம்.ஆகவே, எம்முடன் கரம் கோர்த்துச் செயற்படுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்தார்.