கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்ளும் புதிய குழப்பம்!!

8 hu
8 hu

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இலங்கையின் அரசமைப்பில் காணப்படும் புதிர் காரணமாக பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்க முடியாதவராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது

அரசமைப்பின் படி ஜனாதிபதியே முப்படையின் தலைவர்,ஆனால் அரசமைப்பின் 19 வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சு பொறுப்பினை தன்வசம் வைத்திருப்பதை தடை செய்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் என எவரும் இல்லை,

இதேவேளை சட்டஒழுங்கை பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு படையினரை பயன்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளார்.

இந்த குழப்பத்திற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை புதிய அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் ஆரம்பித்துள்ளனர்.அவர்கள் முப்படையினரை ஜனாதிபதிக்கு கீழ் உள்ள விடயமாக கொண்டு வரமுயல்கின்றனர் அதேவேளை இது குறித்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவது குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியொருவர் 2015 இல் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவே பாதுகாப்பு அமைச்சர் என பொதுஜனபெரமுனவின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.ஆனால் அவர்கள் தெரிவிப்பது போல இந்த விடயம் இலகுவானதல்ல என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் குழுவினர் கூட இதனை எதிர்பார்க்கவில்லை,வெள்ளிக்கிழமை காலை அமைச்சர்கள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் முகநூலில் முதலில் வெளியான அறிவிப்பில் பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு ஆகியவற்றிற்கான அமைச்சர் மகிந்த ராஜபக்ச என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இரண்டாவது அறிவிப்பில் அது நீக்கப்பட்டிருந்தது, அந்த பதவிகளை ஜனாதிபதி வேறு எவருக்கும் வழங்கவில்லை.

19 வது திருத்தம் மைத்திரிபாலசிறிசேனவிற்கு பின்னர் வரும் எந்த ஜனாதிபதியும் அமைச்சரவை பொறுப்பை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதிக்கவில்லை என்கின்றார் சட்டத்துறை நிபுணர் ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையிலும் யுத்தசமாதான பிரகடனஙகளை மேற்கொள்வதற்கான உரிமையுள்ளவர் என்ற அடிப்படையிலும் அவரிற்கு பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருப்பதற்கான உரிமையுள்ளது என்ற கருத்தும் காணப்டுகின்றது.

இதேவேளை இலங்கையின் அரசமைப்பின்படி பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியிடமே உள்ளது என தெரிவித்தார் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளில் ஒருவரான அலி சப்ரி, பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட குடியரசின் ஜனாதிபதி பயன்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் 19வது திருத்தத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ண ஜனாதிபதி எந்த அமைச்சு பதவியையும் தன்வசம் வைத்திருக்க முடியாது என தெரிவிக்கின்றார்.