இலங்கை கபடி அணிக்கு தமிழ் வீரர்கள் தெரிவு

Kabadi
Kabadi

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை ஆண்கள் கபடி அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் மற்றும் பெண்கள் கபடி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடி வருகின்ற சினோதரன், 2016 தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

2014ஆம் ஆண்டு முதல்தடவையாக இந்தியாவில் ஆரம்பமாகிய கபடி ப்ரீமியர் லீக் தொடரில் சினோதரன் பெங்களூர் புள்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவ்வாறான போட்டித் தொடரில் பங்குபற்றிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

2014 முதல் 2018 வரை தொடர்ந்து 5 வருடங்கள் பெங்களூர் புள்ஸ் அணிக்காக விளையாடிய சினோதரனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவ்வருடம் நடைபெற்ற PRO கபடி லீக்கில் விளையாட முடியாமல் போனது.

இலங்கையின் தேசிய கபடி அணிக்காக சுமார் 9 வருடங்களாக விளையாடி வருகின்ற சினோதரன், 2ஆவது தடவையாக தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளார்.

இலங்கை பெண்கள் கபடி அணியில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக களமிறங்கவுள்ளார்.

ஆண்கள் அணி

கே.சினோதரன், சி.ஆர்.சமரகோன், ஏ.டி.ப்ரேமதிலக, கே.பி.குருப்பு, ஜி.எம்.சதுரங்க, டி.எம்.புஷ்பகுமார, எம்.ஆர்.திசாநாயக்க, என்.டி.அபேசிங்க, ஏ.சஞ்சய, ஏ.எஸ்.ரத்னாயக்க, ஜி.மதுஷங்க, சமீர ஹபுதன்த்ரி, கே.ஜி.ஜயமால், ஏ.எல்.சம்பத் மற்றும் என்.சி.குமார

பெண்கள் அணி

பி.எம்.ஹங்சமாலி, எம்.என்.டி.விஜேதுங்க, ஜி.கே.ஹேரத், பி.மதுஷானி, ஐ.டபிள்யு.தமயந்தி,
கே.எஸ்.மனோதனி, பி.எம்.சஞ்ஜீவனி, வி.திலக்ஷனா, ஐ.எஸ்.விஜேதுங்க, ஐ.எம்.விஜேதிலக்க, ஜி.எஸ்.புத்திகா, ஏ.டி.காஞ்சனா, ஜி.கே.எம்.மாதவி மற்றும் ஆர்.ப்ரியவர்னா