நில அபகரிப்பு ஒரு இனப்படுகொலை-விக்கி

vikki
vikki

ஒரு இனத்தின் அடையாளம், வாழ்வு, செழிப்பு ஆகியவற்றின் உயிர் மூலமாக இருப்பது அந்த இனத்தின் பாரம்பரிய நிலம் , வடக்கும் -கிழக்கும் எமது பாரம்பரிய பிரதேசங்கள், வடக்கும் -கிழக்கும் எமது தாயகம், எமது இந்த தாயக நிலம் எம்மிடம் இருந்து அபகரிக்கபப்டுவது என்பது எமது இனம் அழிக்கப்படுவதற்கு சமனானது,ஆகவேதான் நில அபகரிப்பு ஒரு இனப்படுகொலை ஆகின்றது.என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க வி விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.

தமிழர் தாயகத்தை இழத்தல் ” மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறுநாடாளுமன்ற உறுப்பினர் க வி விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவரது உரையின் முழு வடிவம்………

வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம், வாழ்க்கை மற்றும் அடையாளம் ஆகியவற்றை நிர்மூலம் செய்து வரும் நில ஆக்கிரமிப்பில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கும், அதனை தடுப்பதற்குமான வழி வகைகளை ஆராயும் பொருட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான ஆர். சம்பந்தன் அவர்கள் கலந்துகொண்டிருப்பது மிகவும் பொருத்தமானது. என்னை அரசியலுக்கு கொண்டு வந்த சம்பந்தன் அவர்களுடன் இணைந்து இந்த மாநாட்டை நான் ஆரம்பித்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த மாநாட்டில் எமது அழைப்பை ஏற்று முதன்மை உரை ஆற்ற வந்திருக்கும் ஐ. நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதியரசருமண கலாநிதி நவநீதம் பிள்ளை உட்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து அனைவரையும்
வரவேற்கின்றேன்.

தமிழ் மக்கள் இந்த நாட்டின் சுதேச (முதலாவது) குடிமக்கள். 3000 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இந்த நாட்டில் வாழ்ந்துவருகின்றோம். அந்நியர்களின் காலனியாதிக்கம் 1505 ஆம் ஆண்டு ஏற்படும்வரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நிலப்பரப்பு தமிழ் மன்னர்களின் முழுமையான ஆளுகையின் கீழ் செழிப்பாக இருந்தது. பிரித்தானியர்களின் ஆட்சியின் போது 1833 ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாகம் ஒன்றாக்கப்பட்டு பின்னர் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர் அதிகாரம் சிங்கள மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட நாள் முதல் எமது நிலங்கள் அதிகார பலத்தின் மூலம் சிங்கள அரசாங்கங்களினால் அபகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.

1970 களில் ஆயுத போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் பாரம்பரியமக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு என்பது சத்தம் இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு பெரும் யுத்தமாக இன்று மாறியிருக்கிறது. நிலம் மட்டுமன்றி, நிலத்துடன் சேர்த்து, எமது வாழ்வும், அடையாளமும், வரலாறும் சேர்த்தே அழிக்கப்படுகிறது. இது ஒரு பெரும் மிகப்பெரும் மனித உரிமை மீறல் ஆகும். அரசாங்கங்கள் மேற்கொண்ட இந்த இந்த மனித உரிமை மீறல்களே தமிழ் மக்கள் தமது நிலத்தையும், வாழ்வையும் , அடையாளத்தையும் பாதுகாப்பதற்காக ஆயுத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்தது.

ஆயுத போராட்டம் 2009ஆம் ஆண்டு ஒரு பெரும் இனஅழிப்புடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும், எமக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை. மாறாக, மேலும் தீவிரம் அடைந்துள்ளது. எமது மக்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவம், வடக்கு கிழக்கில் தற்போது எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. அபிவிருத்தி, தொல்பொருள் ஆய்வு, காடுகள் ஒதுக்கீடு, வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் என்ற போர்வைகளில் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, காட்டிலாகா, வீடமைப்பு அதிகாரசபை ஆகிய திணைக்களங்கள் உட்பட பல்வேறு அரச திணைக்களங்கள் எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு யுத்தத்தில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

இதனை அண்மையில் அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவனம் வெளியிட்ட முடிவற்ற போர் என்ற ஆய்வு அறிக்கையில் ஆதாரங்களுடன் வெளியிட்டது.

இலங்கையில் நடைபெறும் நில ஆக்கிரமிப்பு பற்றி ஆராய்ச்சி செய்த இஸ்ரேலிய அறிஞரான ஓரன் யிட்ச்பச்சேல் என்பவர் இலங்கையை இனநாயக நாடு என்று விபரித்திருக்கிறார். தனி ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் அரசுகளை இனநாயக நாடு என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது முதல் மிகவும் நுட்பமான முறையில் ஒரு இனநாயக நாடாக கட்டமைக்கப்பட்டுவருகின்றது. இலங்கையின் இத்தகைய இனநாயக கட்டமைப்பே இந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மை, இன முரண்பாடுகள், ஆயுத யுத்தம் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்கு காரணமாக இருந்து வருகின்றது. ஆகவே, இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு சமாதான முயற்சிகளோ, பொறுப்புக்கூறல் முயற்சிகளோ அல்லது நீதிக்கான முயற்சிகளோ வெற்றி அளிக்கப்போவதில்லை. இதனை சர்வதேச சமூகம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படாமல் சமாதானத்தை அடைய முடியாது, அதேபோல, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சமாதானம் அவசியம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ளன. நில உரிமைகள் மிக முக்கியமான மனித உரிமைகள் ஆகும். ஒரு இனத்தின் அடையாளம், வாழ்வு, செழிப்பு ஆகியவற்றின் உயிர் மூலமாக இருப்பது அந்த இனத்தின் பாரம்பரிய நிலம். வடக்கும் -கிழக்கும் எமது பாரம்பரிய பிரதேசங்கள். வடக்கும் -கிழக்கும் எமது தாயகம். எமது இந்த தாயக நிலம் எம்மிடம் இருந்து அபகரிக்கபப்டுவது என்பது எமது இனம் அழிக்கப்படுவதற்கு சமனானது. ஆகவேதான் நில அபகரிப்பு ஒரு இனப்படுகொலை ஆகின்றது.

அதனால்தான், எமது பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கையும் -கிழக்கையும் பாதுகாக்கும் வழிமுறைகளை, சவால்களை ஆராய்வதற்காக “தமிழர் தாயகத்தை இழத்தல்” என்ற தலைப்பில் இன்றைய இந்த சர்வதேச மாநாட்டை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த மாநாடு ஒரு ஆரம்பம். எமது நிலத்தை நாம் பாதுகாப்பதற்கு சர்வதேச மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் நாம் மேற்கொள்ளக்கூடிய வழிவகைகளையும், உபாயங்களையும் வகுத்து செயற்படும் பொருட்டு தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் நடைபெறும். எமது இந்த நில மீட்பு போராட்டத்துக்கு சர்வதேச சமூகம் எல்லா வகையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் என்று இந்த சந்தர்ப்பதில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என குறிப்பிட்டார்