சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு அழுத்தம் கொடுங்கள்: தமிழரசுக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!

IMG 0471 1
IMG 0471 1

வவுனியா சுற்றுலா மையத்திற்குள் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழரசுகட்சியை சேர்ந்த வவுனியா நகரசபை உறுப்பினர்களிற்கு கட்சியின் செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார் .

தமிழரசு கட்சியின் மாவட்டகுழு கூட்டம் வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று (21)  இடம்பெற்றது. இதன்போதே அவர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

வவுனியா குளத்திற்குள் அமைக்கப்பட்ட சுற்றுலா மையத்தில் நகரசபையின் அனுமதியின்றி சில கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை பல்வேறு தரப்புகளிடமும் விமர்சனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்டகுழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக கட்டடங்கள் அமைக்கப்பட்ட போதே அவற்றை தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த சத்தியலிங்கம், குறித்த கட்டடங்களை விரைவாக அகற்குவதற்கு எமது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சபைநிர்வாகத்திற்கு அழுத்தம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஏனைய கட்டடங்களை உடைப்பதற்கு  குத்தகையாளருக்கு ஒருவாரகாலம் அவகாசம் வழங்குவதென்றும், அதற்குள் அவர் அதனை உடைக்கத்தவறி, நகரசபை தலையிட்டு அவற்றை அகற்றுவதுடன், அவரது குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற நகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழரசுகட்சியின் மத்தியகுழுகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய கட்சியை புனரமைப்பது, புதிய உறுப்பினர்களை கிராம, நகர மட்டங்களில் இருந்து உள்ளீர்ப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.