மீனவர் பிரச்சினையை சிலர் தவறாகச் சித்தரிக்கின்றனர்-டக்ளஸ்

a8fffb3f7b29e1ee324cd0914dcbc89b XL
a8fffb3f7b29e1ee324cd0914dcbc89b XL

அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற  இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருகின்றதே தவிர  தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த யோசனையை சிலர் மிகைப்படுத்தி தவறாகச் சித்தரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்வொன்றில் குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கடல் வளத்தையும் எமது கடற்றொழிலாளர்களையும் பாதிக்கும் இந்திய மீனவர்களது எல்லைதாண்டும் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது.

குறிப்பாக இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளினாலும் எமது நாட்டிலும் தடைசெய்யப்பட்ட ஒரு தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை  எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனாலும் இந்த விடயத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.  அதனடிப்படையில் சில யோசனைகள் பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு யோசனையே அனுமதிப்பத்திரம் வழங்கும் விடயமும். அது ஒரு முடிவல்ல. இதை சிலர் தவறான பார்வையில் சித்தரிக்கின்றனர். ஆனாலும் இவ்விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் எனக்கும் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வு உண்டு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் எடுக்கவுள்ள முடிவுகள் பாதிக்கப்படுகின்ற கடற்றொழிலாளர்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே இருக்கும் என்றும் அவர்களது விருப்புக்கு மாறானதாக அவை இருக்க மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்த காலகட்டத்தில் கடவுச் சீட்டின்றி இந்தியாவுக்கு சென்ற எமது மக்களை அந்நாட்டு அரசு தமிழக மக்களும் கௌரவமாக ஏற்றுக்கொண்டனர் என சுட்டிக்காட்டிய அமைச்சர், “தற்போதைய பூகோள அரசியல் ரீதியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இரண்டு நாடுகளுக்கும் அவசியமானது.

அதேநேரம் 1987ஆம் ஆண்டு உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையே தமிழ் மக்களிகளுக்கு கௌரவமான அரசியல் தீர்வாக  அமையும் என 34 வருடமாக நான் கூறிவருகின்றேன்.

இதை ஏனைய தமிழ் தலைமைகள் போட்டுடைத்துவிட்டனர். இன்று ஜெனிவாவில் அதை சுட்டிக்காட்டியதும் அதை அவர்கள் கையிலெடுத்துள்ளனர்.

அதேநேரம் தேசிய நீரோட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம் ஊடான பாதையே எமது மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்ததொரு தீர்வை தரும் என கூறி அதன்வழியில் அனைவரும் பயணிக்க வருமாறு கோரியிருந்தேன்.

ஆனால் எனது அழைப்பை துரோகம் என்று பிரபாகரனது புராணம் பாடியவர்கள் கூறிவந்தார்கள். இன்று ஏற்றுக்கொள்கின்றனர்” என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.